பல கோடிகளை செலவு செய்து பிரபல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமாக எடுக்கப்படும் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கும் என்ற காலம் மலையேறி விட்டது. சில கோடிகளை செலவு செய்து முன்பின் அறியாத நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள Manjummel Boys என்ற மலையாள திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டு வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. இயக்குநர் சிதம்பரம் இயக்கி ஸ்ரீநாத் பாசி, சௌபின் ஷாஹிர், கணபதி, பாலு வர்கீஸ், ஜீன் பால் லால ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள Manjummel Boys படத்திற்கு மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக சினிமா ரசிகர்க மட்டுமல்லாது தமிழக குடும்பங்களும் இந்தப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள ’டெவில்ஸ் கிச்சன்’ என்றழைக்கப்படும் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் Manjummel Boys. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு, அரங்கம் முழுவதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள Manjummel Boys, 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திரையிடப்பட்டு 50 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்ற புதிய சாதனையையும் அது படைத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வெளியான மற்ற மொழி படங்களில் பாகுபலி-2 (தெலுங்கு) திரைப்படம் அதிக அளவில் ரூ.151 கோடி வசூல் வேட்டை நடத்தி முதல் இடத்தில் உள்ளது. கே.ஜி.எஃப்-2 ரூ.121 கோடி (கன்னடம்), ஆர்.ஆர்.ஆர் ரூ.83.5 கோடி (தெலுங்கு), அவதார் தி வே ஆஃப் வாட்டர் ரூ.77 கோடி(ஹாலிவுட்), பாகுபலி முதல் பாகம் ரூ.64 கோடி (தெலுங்கு), ஜவான் ரூ.51 கோடி (பாலிவுட்) இதற்கு முன்பாக மற்ற மொழி படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது முதல் மலையாள படமாக மஞ்ஞுமல் பாய்ஸ் படம் இணைந்துள்ளது. இதில் இந்தப் படத்திற்கு தனிப்பெருமை ஒன்று உண்டு. மேற்கண்ட மற்ற படங்கள் அனைத்தும் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியானவை. ஆனால், மஞ்ஞுமல் பாய்ஸ் படம் நேரடியாகவே வெளியானது.
இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் மலையாள படங்களின் வரிசையில் பல சாதனைகளை படைத்துள்ளது. ’Manjummel Boys’ திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூட் அந்தனி ஜோசப் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற திரைப்படத்தின் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது. 2018 திரைப்படம் ரூ175 கோடியுடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், திரையிடப்பட்ட 21 நாட்களிலேயே அந்த சாதனையை மஞ்ஞுமல் பாய்ஸ் படம் முறியடித்துள்ளது. 2016 ஆண்டு வெளியான மோகன்லாலின் புலிமுருகன் திரைப்படம் ஈட்டிய 139 கோடி ரூபாய் வசூலை வெறும் 17நாட்களில் இந்தப் படம் முறியடித்தது.
Manjummel Boys திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.180 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 62 கோடி ரூபாயை வசூலித்துள்ள Manjummel Boys, இந்தியாவில் மொத்தமான சுமார் 120 கோடியை வசூலித்துள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.180 கோடிக்கு மேல் வசூல் செய்து வியக்க வைக்கும் சாதனையை படைத்துள்ளது.
Manjummel Boys திரைக்கு வந்த மூன்றாவது வார இறுதியில் அதன் வசூல் தொகை உயர்ந்து கொண்டே சென்றது. படம் வெளியாகி மூன்றாவது வெள்ளியன்று ரூ.5.5 கோடியாக இருந்த டிக்கெட் விற்பனை அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் ரூ.8.9 கோடியாக உயர்ந்தது, அதேபோல் நாள்தோறும் சராசரியாக 2.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
மூன்றாவது திங்களன்று ரூ.3.1 கோடியை வசூலித்த Manjummel Boys, செவ்வாய்க் கிழமை ரூ.2.7 கோடியை வசூலித்தது. ஒட்டுமொத்தமாக, பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக உயர்ந்து வாரம் முழுவதும் நிலையான வருவாயை அள்ளிக் குவித்தது. Manjummel Boys. கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்று பல திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ்நாட்டில் இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதற்கு க்ளைமேக்ஸில் குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடலை சரியாக பயன்படுத்தியதும், இரண்டாம் பாதி முழுவதும் தமிழில் வருவதும் முக்கியமான காரணமாக உள்ளது. கடைசி 30 நிமிடங்களுக்கு மேல் ஆடியன்ஸை கட்டிப்போடும் வகையில் படத்தின் உருவாக்கமும் சிறப்பாக இருந்ததும் ஒரு காரணம். இன்னும் ஒருவாரம் இதேபோல் கூட்டம் இருந்தால் முதல் மலையாள படமாக 200 கோடி வசூல் என்ற இமாலய சாதனையை மஞ்ஞுமல் பாய்ஸ் படம் எட்டும்.