ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கோவையில் காணாமல்போன மணிப்பூரை சேர்ந்த இளைஞரை மீட்டுத்தரக்கோரி ட்விட்டரில் அவரது நண்பர்கள், உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அடுத்த நாளே அந்த இளைஞர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக காவல்துறையினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் இருந்து கடந்த 23-ஆம் தேதி அன்று கோவை வந்தடைந்த ஜான்சன் என்பவர் ஊரடங்கு உத்தரவால் தன் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் 5 நாட்களாக கோவையில் சுற்றி வந்துள்ளார். ஜான்சனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவரை காணவில்லை என்று ட்விட்டர் மூலம் புகார் அளித்திருந்தனர்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், மூலம் தகவல் சேகரித்து அந்த நபரை இரு தினங்களாக காவல்துறையினர் உதவியுடன் சமூக பணியாளர்கள் விவேக், ஹரி பிரசாத் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சிங்காநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெகன் உதவியுடன் உக்கடம் கரும்புக்கடை பகுதியில் ஜான்சன் கண்டுபிடிக்கப்பட்டார். அந்த இளைஞருக்கு, கொரோனா பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மணிப்பூர் செல்லும் வரை அவரை கவனித்துக் கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாக ட்விட்டர் பதிவிட்ட நபரை கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்துள்ளது கோவை காவல்துறை.