பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் NCC, NSS, SCOUT, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்காக மாணவ, மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்லும்போது சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியின் பெற்றோரிடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்று அதன் பின் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது” என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இத்துடன் மாணவ, மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும் போது 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை என உடன் செல்ல வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மட்டுமன்றி ஒவ்வொரு பள்ளியிலும் "மாணவர் மனசு" என்ற புகார் பெட்டி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.