திருச்சியில் பலருடன் தகாத முறையில் பழகிய பெண்ணை, அந்தப் பெண்ணுடன் தகாத முறையில் பழகிக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதை, அந்தப் பகுதியில் சென்ற சிலர் கண்டுள்ளனர். இதையடுத்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்தப் பெண்ணின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையிலும், முகத்தில் கல்லைப்போட்டு சிதைக்கப்பட நிலையிலும் இருந்தது. ஆனால் அந்தப் பெண் யார்? அவரை யார் கொன்றது? போன்ற தகவல்கள் தெரியாமல் காவல்துறையினர், திணறி வந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண் யார் என அடையாளம் காணப்பட்டு, கொலை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி மலர்கொடி (38) தான் அந்தப் பெண். இந்தத் தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்த போது, இருவரும் பிரிந்துள்ளனர். பின்னர் மலைபட்டி ரோட்டில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் தம்பியான மணிகண்டனை என்பவரை மலர்கொடி மணந்துள்ளார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் மணிகண்டன் மாரடைப்பால் இறந்துள்ளார். இதன்பின்னர் பெண் குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்த மலர்கொடி, மகனுடன் பணிக்காக துபாய் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார்.
தமிழகம் வந்ததும், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். அங்கு மலர்மணி, சரோஜா மற்றும் ஷீபா ஆகிய பெண்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதில் மலர்மணி என்ற பெண்ணின் கணவரது நண்பரான சிவகங்கை மாவட்டம் மு.அம்மாபட்டியை சேர்ந்த முருகன் என்பவருடன் மலர்கொடிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து காரியப்பட்டியில் உள்ள தன் வீட்டிற்கு மலர்கொடியை அழைத்து சென்ற முருகன், அவருடன் தகாத முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்தாலும், தகாத உறவுக்காக பல இடங்களுக்கு (வனப்பகுதிகள்) வெளியே சென்றுள்ளனர்.
இதற்கிடையே மலர்கொடிக்கு வேறு சில ஆண்களுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இது முருகனுக்கு தெரியவர அவர் மலர்கொடி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான், கடந்த 27ஆம் தேதி முருகனும், மலர்கொடியும் தகாத உறவிற்காக வழக்கமாக செல்லும் துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் முருகனிடம், மலர்கொடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஏற்கனவே மலர்கொடி மீது ஆத்திரத்தில் இருந்த முருகனுக்கு மேலும் கோபம் அதிகரிக்க, தகாத உறவில் ஈடுபட்ட பின்னர் மலர்கொடியின் முகத்தில் கல்லை போட்டு கொன்றுள்ளார். காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்ட மலர்கொடியின் புகைப்படம் ஊடங்களில் ஒளிப்பரப்பு செய்யப்பட, அதைக்கண்ட மலர்மணி, சரோஜா மற்றும் ஷீபா ஆகியோர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இறந்தது மலர்கொடி தான் என காவல்துறையினர் உறுதி செய்தனர். அத்துடன் முருகனையும் கைது செய்தனர். முருகனும் காவல்துறையினரிடம் நடந்த உண்மையை கூறியுள்ளார். தற்போது முருகனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
(தகவல்கள் : சுரேஷ்குமார், புதிய தலைமுறை செய்தியாளர், மணப்பாறை)