செய்தியாளர்: நிக்சன்
காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 41). இவரது மனைவி ராஜஸ்ரீ (வயது 40), இவர்களது மகள் ருதிஷா (வயது 13). ஆகிய மூன்று பேரும் ஒரு காரில் பழனி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சாலிகளம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, சசிதரன் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள பாலத்தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தாய் - மகள் இருவரும் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சசிதரன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த அவரச கால மருத்துவ நிபுணர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசிதரனுக்கு குளுகோஸ் போட்டு அவசர சிகிச்சையை தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து சாலை பகுதிக்கு கொண்டு வந்து காரை உடைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதே போல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்ரீ யும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறந்த இருவரின் உடல்களையும் மணப்பாறை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.