கரூரில் இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியை சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருவரும் ஒரே ஜாதியாக இருந்தாலும் வேறு வேறு பிரிவு என்று கூறப்படுகிறது. இதனால் சரவணனின் உறவினர்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சரவணன் தனது பெற்றோருடன் ஊரை விட்டு ஒதுங்கி, அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணனின் உறவினர்கள் அவர் வாழ்ந்து வந்த வீட்டை அதிகாரிகளின் உதவியோடு இடிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சரவணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த சரவணன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி விட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.