நீலகிரியில் காட்டுயானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (26). இவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது நண்பரான சுரேஷ் என்பவருடன் பாட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டுயானை இருவரையும் வழிமறித்து துரத்தியுள்ளது.
தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள விஜயனும் நீண்ட தூரம் ஓடியுள்ளார். ஆனால், யானை அவரை விடாமல் பின் தொடர்ந்து விரட்டியது. இதில் சிக்கிக்கொண்ட விஜயனை தும்பிக்கையால் தூக்கியது யானை. தும்பிக்கையால் தூக்கியபடியே சற்று தூரம் ஓடிய அந்த யானை பின்னர் அவரை தூக்கி வீசியது.
அதனையடுத்து, கீழே விழுந்து கிடந்த விஜயனை யானை மிதித்துக் கொன்றது. இதில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், விஜயனின் நண்பரான சுரேஷையும் யாரை விரட்டியுள்ளது. அவரும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்துள்ளார். யானையிடம் இருந்து தப்பித்து ஓடிய சுரேஷ், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடனடியாக விஜயனின் உடல் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.