செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
பூந்தமல்லியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பூந்தமல்லி அரசுப் பள்ளி அருகே கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்றை பூந்தமல்லி பகுதியில் வைத்துள்ளார். அது அங்கு வசிக்கும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவர் வைத்துள்ள அந்த பேனரில், “வெற்றிகரமாக நூறாவது நாளாக நான் மது அருந்தவில்லை. எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு இடங்களில் பிறந்தநாள், காது குத்து, அரசியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்து பார்த்திருப்போம். ஆனால், நூறு நாள் குடிக்காமல் இருந்ததற்காக ஒருவர் அவரே, அவரை வாழ்த்தி பேனர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவக்குமார் பேசுகையில், “நான் நூறாவது நாள் குடிக்காமல் இருக்கிறேன். குடியை நிறுத்துவதில் எனக்கும் எனது நண்பருக்கும் போட்டியிருந்தது. அதன்முடிவில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அதனால் அதனை கொண்டாடும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேனர் வைத்தேன்.
மேலும் 100 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் எனக்கு இருந்த ரூ.80 ஆயிரம் கடனை அடைத்துவிட்டேன். உடலும் நல்ல நிலையில் இருக்கிறது” என தெரிவித்தார்.
அதிக அளவில் குடித்துக் கொண்டிருந்த நபர் திடீரென 100 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் அவருக்கு அவரே பேனர் வைத்தது பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேனரை பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரது கடைக்கு வந்து அவரை வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர்.