பெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் முடித்த போலி மருத்துவர் கைது !

பெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் முடித்த போலி மருத்துவர் கைது !
பெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் முடித்த போலி மருத்துவர் கைது !
Published on

அரசு மருத்துவர் எனக்கூறி பெண்ணை திருமணம் செய்து 12 லட்சம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கடந்த 11-ஆம் தேதி தான் திருமணம் நடந்தது. மாமியார் வீட்டில் விருந்துக்கு செல்ல வேண்டிய கார்த்திக், மோசடி புகார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது தான், இவ்வழக்கின் முக்கிய திருப்பம். அரசு மருத்துவர் என்ற பெயரில் வலம் வந்த கார்த்திக்குக்கு, அப்பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். கார்த்திக்கின் குணநலன்கள் பிடித்துப்போகவே, தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார், தனக்கு பெற்றோர் இல்லை எனக்கூறி பரிதாபத்தை ஏற்படுத்திய கார்த்திக்கு, பெண்வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது.

அதில் முக்கிய விஷயம் என்னவென்றால், 75 சவரன் தங்க நகைகளும், 12 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சனையாக தர முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பணத்தை வாங்கிக் கொண்ட கார்த்திக், கடந்த12-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரானார். நல்லவர்போல் நடித்தவரின் சுயரூபம் அன்றுதான் வெளிப்பட்டது.

ஏற்கெனவே 12 லட்சம் பணம் வாங்கிக் கொண்ட அவர், மாமியாரிடம் மேற்கொண்டு பணம் கேட்டு நிர்பந்தித்துள்ளார். அவரின் நோக்கம் முழுவதும் பணத்தின் மேல் இருந்ததால் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விசாரணை நடத்தியபோது, கார்த்திக் மருத்துவர் அல்ல, ஒரு மோசடி பேர்வழி என்பது தெரியவந்தது. கோவையை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திக், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். ஏதோ சில பிரச்னையின் காரணமாக 2-ஆம் ஆண்டே அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.

அந்த தொடர்புகளை வைத்துக் கொண்டு, தான் அரசு மருத்துவர் எனக்கூறி ஏமாற்றி இருப்பதாக கூறுகிறது காவல்துறை. சினிமா ஹீரோ போன்ற தோற்றம், சொகுசு கார், அதில் அரசு பணியாளருக்கான முத்திரை என பக்கா செட்டப்போடு வலம் வந்ததால், கார்த்திக் மீது பெண் வீட்டாருக்கு சந்தேகம் எழவில்லை. விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த காவல்துறையினர், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவர் எனக்கூறி மோசடி செய்த கார்த்திக்கிற்கு, ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்காக சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவல்துறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com