கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், கைகளைக் கட்டி தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபா மற்றும் சுஜி. உடன் பிறந்த சகோதரிகளான இருவரும் ஞாயிற்றுகிழமை இரவு அழகிய மண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இரவு கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்த சகோதரிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.
சுபா இருசக்கர வாகனத்தை ஓட்ட அவரது தங்கை சுஜி பின்னால் அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனம் அழகியமண்டபம் பகுதியில் வந்திருக்கிறது. அப்போது இவர்களை பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3-மர்ம நபர்களில் ஒருவர் பின்னால் இருந்த சுஜியின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக தங்க சங்கிலி அந்த மர்ம நபர்கள் கையில் சிக்காத நிலையில் சுதாகரித்துக்கொண்ட சகோதரிகள் மர்ம நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தை தங்கள் காலால் எட்டி உதைத்தனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஒருவரை விரட்டிச்சென்று சுற்றி வளைத்து பிடித்து கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து இழுத்து வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசாரிடம் பொதுமக்கள் அந்த நபரை ஒப்படைத்த நிலையில் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், இவருக்கு வேறு பல செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அவருடன் வந்த மற்ற இருவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.