செய்தியாளர் - விக்டர் சுரேஷ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வரதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் பெங்களூருவில் வேலை செய்து வரும் நிலையில், உயிரிழந்த உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக திருப்பத்தூருக்கு பேருந்து மூலம் சென்றுள்ளார்.
திருப்பத்தூருக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்துக்கு காத்திருந்துள்ளார். அப்படி அண்ணா நகர் பகுதியில் நின்றிருந்தபோது, அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று வந்தது. இதனைப் பார்த்த ஆறுமுகம், பேருந்து நிற்பதற்கு முன்பாகவே அதில் ஏற முயன்றிருக்கிறார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஆறுமுகத்தின் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தால் ஆறுமுகம் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அரசு பேருந்தில் ஏற முற்படும்போது அவர் தவறி விழுந்ததும், அவர் மீது பேருந்து ஏறுவதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பதைப்பதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தில் பயணிக்கும்போது, பேருந்து நின்றபிறகு கவனமாக ஏறி, இறங்க வேண்டும். அப்படி, கவனமாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.