செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்நல்லூர் ஊராட்சி மன்ற தலைவியாகப் பதவி வகித்து வருபவர் பகவதி. இவருடைய கணவர் நாகராஜன். இவர் கன்னிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர், லட்சுமி நாராயணன் என்பவரிடம், தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டு குழியமாக இருப்பதால், 25 லோடு மணல் தருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஒப்பந்ததாரர் லட்சுமி நாராயணன் முதலில் 5 லோடு மணலை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மீண்டும் 20 லோடு மணல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நாகராஜன், ஒப்பந்ததாரர் லட்சுமி நாராயணனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரர் லட்சுமி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் நாகராஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நாகராஜன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்களின் ஆதரவாளர்கள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி,100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.