வானூர் அருகே காய்கறி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ராஜ்குமார். இவரின் கூட்டாளியான, நாவற்குளத்தை சேர்ந்த உயதயராஜ்(26) மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 11ந் தேதி வானுார் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சுரேஷ் என்பவரிடம் உதயராஜ் மாமூல் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுக்க, ஆத்திரமடைந்த உதயராஜ் நானும் ரவுடிதான் எனக் கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்ததால் உதயராஜ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார் உதயராஜை தேடிவந்தனர். இந்நிலையில், மாட்டுக்காரன்சாவடி அருகே உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டியில் உதயராஜ் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அங்கு விரைந்த தனிப்படையினர் உதயராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே உதயராஜ் தப்பிக்க முயன்றபோது அடிப்பட்டு அவரது காலில் முறிவு ஏற்பட்டது.