ஜேஎன்யு சம்பவம் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது: உத்தவ் தாக்கரே
ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுள்ள கும்பல் தாக்குதல் தனக்கு 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுவதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நேற்று கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “இந்தத் தாக்குதல் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது. முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் நிலவுகிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு இதுபோன்று எவ்வித சம்பவங்களும் நிகழாது என உறுதி அளிக்கிறேன். அவர்கள் முற்றிலும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். ஜேஎன்யுவில் நடந்ததை போன்று மகாராஷ்டிராவில் நிகழ்த்த நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்