சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மோட்டிவேஷன் எனும் பெயரில், மகா விஷ்ணு என்பவர் பிற்போக்குத்தன கருத்துகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். ஆரம்பத்தில், திருக்குறள் கூறி உரையைத் தொடங்கினாலும், அதன் பிறகு மந்திர, தந்திரங்கள், பாவ, புண்ணியங்கள், கருமா, முற்பிறவி என்று இஷ்டம்போல் பேச ஆரம்பித்தார்.
அப்போது முற்பிறவி பற்றி அவர் பேசியபோது குறுக்கிட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர், “ஏன் பிற்போக்குத்தனமான கருத்துகளை மாணவிகள் மத்தியில் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மகாவிஷ்ணு, மோசமான முறையில் அந்த ஆசிரியரிடம், “நீங்கள் என்ன சிஇஓவை விட பெரியவரா?” என்று தொடங்கி, அவர் மனது புண்படும்படி வகையில் தாக்கி பேசினார்.
இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினர் மகா விஷ்ணுவின் ஆணவப் பேச்சுக்கும் அர்த்தமற்ற கருத்துக்கும் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் அவர் பேசிய கருத்துக்களும், மாற்றுத்திறனாளிகள் குறித்து மாணவர்களிடத்தில் பிற்போக்குத்தனமாக அவர் பேசிய கருத்துக்களும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. இதுதொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர் மீது சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்திருந்தனர்.
இதற்கிடையேதான் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த மகாவிஷ்ணு இன்று (07.09.2024) மதியம் 1.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதனையடுத்து, காவல்துறையினரால் சென்னை விமான நிலையத்திலேயே வைத்து மகாவிஷ்ணு தற்போது கைது செய்யப்பட்பட்டார். ஊடகவியலாளர்கள் இல்லாத வேறு வழியில் அழைத்து செல்லப்பட்ட மகாவிஷ்ணு, எங்கே அழைத்துச் செல்லப்பட்டார் எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எந்த நேரத்திலும் சைதை காவல்நிலையத்திற்கு அவர் அழைத்து வரப்படலாம் என்று சொல்லப்பட்டாலும், ரகசியமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் மகா விஷ்ணுவை காண காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் சிலர், ‘மகா விஷ்ணு நல்ல போதனை மட்டுமே செய்கிறார்’ என்று தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக நம்மிடையே பேசிய மகாவிஷ்ணுவின் ஆதரவாளர் ஒருவர், “குரு ஜி மகா விஷ்ணு அன்பு, கருணை மட்டுமே போதிக்க கூடியவர். அப்படிப்பட்டவர் எந்த உயிருக்கும் தவறானதை யோசிக்க மாட்டார். அவர் கூறிய நற்கருத்துக்களால் பல உயிர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. எனவே, நல்ல விதமாகதான் அவரின் போதனைகள் இருக்கிறதென நான் நினைக்கிறேன். கெட்டவிதமாக எனக்கு தெரியவில்லை..” என்றார்.
அதேநேரம்,
மாற்றுத்திறனாளியாக ஒருவர் பிறப்பதென்பது அவரது முற்பிறவியின் விணை என்ற மகாவிஷ்ணுவின் ‘அறிவியலுக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற போலியான’ பரப்புரை, கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
குறிப்பாக மகாவிஷ்ணு அதை மாணவர்களிடத்தில் கூறி, இளைய தலைமுறையிடம் விஷத்தை விதைப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இத்துடன் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரை மகாவிஷ்ணு மோசமான முறையில் அனுகியதற்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இவை மூன்று விஷயங்களையும் கருத்தில் கொண்டு, மகாவிஷ்ணுவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென குழந்தை நல ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கங்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். வருங்காலத்தில் மகாவிஷ்ணு போன்றோர் பள்ளிக் குழந்தைகளிடம் போதனை செய்வதை தடுக்கவும் பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.