தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து கும்கி உதவியுடன் பிடித்துவரப்பட்டு பொள்ளாச்சி வனசரகத்தில் விடப்பட்ட மக்னா யானை, மலை அடிவாரத்தில் உள்ள சரளப்பதி கிராமத்தில் விளை நிலங்களை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தது. இந்நிலையில், யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மக்னா யானையை பிடிக்க பொள்ளாச்சி அடுத்த சரளப்பதி பகுதியில் கும்கி யானைகள் முகாமிட்டு கண்காணிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் கும்கி யானைகளில் உதவியுடன் மக்னா காட்டு யானையை பிடித்து கழுத்தில் காலர் ஐடி பொருத்தி வால்பாறை வனச்சரகத்தில் விடப்பட்டது. கடந்த ஒருவாரமாக காலர் ஐடி ஒரே இடத்தில் இருப்பதை அறிந்த வனத் துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மக்னா காட்டு யானை இறந்து கிடப்பதை அறிந்து, உடனடியாக கால்நடை வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். முதற்கட்ட தகவலில், மக்னா யானை மலை பகுதியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.