இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வளித்த மதுரை பெண்

இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வளித்த மதுரை பெண்
இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வளித்த மதுரை பெண்
Published on

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதோடு, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் மதுரையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருநகரிலுள்ள நெல்லையப்பர் தெருவை சேர்ந்தவர் காந்திமதிநாதன். டி.வி.எஸ் நிறுவனத்தில் முதன்மை கணக்காளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி அருணா, இல்லத்தரசி. இவர் கடந்த 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருநகர் 6-வது பேருந்து நிறுத்தம் அருகே, எதிர்பாராதவிதமாக தானே நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த அருணாவை  உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அருணா சிகிச்சை பலனின்றி  நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முழு சம்மதத்துடன் உடல் உறுப்புகளான இதயம், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சிறுநீரகம், ஒரு கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கும், இதயம் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளதால், அருணா இறந்தாலும் உடல் உறுப்புகள் செயல் இழந்த 5 பேருக்கு மறுவாழ்வு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது சகோதரர் அய்யப்பன்  தெரிவித்துள்ளார். தனது சகோதரிக்கு இருசக்கர வாகனம் நன்கு ஓட்ட தெரிந்தாலும், தலைகவசம் அணியாததால் இன்று தனது தங்கையை இழந்து நிற்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் காவல்துறையினர் கூறுவதற்காக தலைகவசம் அணியாமல், எதிர்காலத்தையும் தனது குடும்பத்தையும் மனதில் கொண்டு தலைகவசம் கண்டிப்பாக அணிந்து வாகனம் ஓட்ட வேண்டுமென அய்யப்பன் தெரிவித்துள்ளார். மேலும் தலைகவசம் அணிவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com