மக்களுக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தியுள்ளதால் கடன் சுமை கூடியுள்ளதாக வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது “நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியவில்லை. வரவு செலவு, லாபம் நஷ்டத்தை பற்றியே பேசிவரும் நிதி அமைச்சர் சமூக சேவை குறித்தும் சிந்திக்க வேண்டும். வெள்ளை அறிக்கையில் ஒரு உள் அறிக்கை உள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கலர் டி.விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை. வெள்ளை அறிக்கையின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது. சேவைத் துறையின் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என கூற முடியும்.
அரசின் செயலாளரை அருகில் வைத்து கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர், அறிக்கைக்கு தான்தான் பொறுப்பு என ஏன் கூற வேண்டும். நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு அரசின் சார்பில் பொறுப்பேற்க வேண்டும்.
மக்களுக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தியுள்ளதால் கடன் சுமை கூடியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை அதிமுக 10 ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளது. அரசின் மீது கடன் சுமை இல்லை என்றால் மக்கள் மீது கடன் சுமை கூடியிருக்கும். மக்களை திசை திருப்ப வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.