மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் நடைபெற்ற முனியாண்டி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அடுத்த வடக்கம்பட்டி கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடாக கருதப்படுகிறது. வடக்கம்பட்டியில் உள்ள முனீஸ்வரருக்கு கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெள்ளி அன்று திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு வெள்ளிக் கிழமை பூஜை முடிந்து பின்னர் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. பின்னர் இரண்டரை டன் பிரியாணி அரிசி கொண்டு 50 பிரமாண்ட பாத்திரங்களில் சமையல் பணி நடைபெற்றது.
இதையடுத்து சமையல் வேலைகள் முடிந்த பின்னர், அதிகாலை 4 மணியளவில் முனீஸ்வரருக்கு படையல் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுற்றுப்புறம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது.
85 வது ஆண்டாக நடைபெற்ற இந்த முனியாண்டி திருவிழாவில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.