மதுரையில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய ஐந்து பேரும் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் அவர்களுக்கு உணவு உள்ளிட்டவைகளை சமைத்துக் கொடுப்பதற்காக அந்த சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக சுற்றுலா பயணிகளுடன் மேற்கண்ட 5 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வரும்பொழுது யாரும் எளிதில் தீப்பற்றக் கூடிய எந்த பொருட்களையும் கொண்டு வரவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் மூலமாகவே சிலிண்டர்கள், மண்ணெண்ணெய், அடுப்பு விறகு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வாடகை ரயில் பெட்டியில் வைத்துக் கொண்டு அந்த ரயில் பெட்டி பல்வேறு ரயில்களோடு இணைக்கப்பட்டு பல்வேறு நாட்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் எப்படி ரயில் நிலையத்திற்குள் வந்தது என்பது குறித்து ஐந்து நபர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரிடம் கேட்டபோது, ஐந்து நபர்களும் மேற்கண்ட சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். தற்பொழுது அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையை தொடர்ந்துதான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார்.