மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மீன் பிடித்துச் சென்றனர். விவசாயம் செழிக்கவும் நல்ல மழை பெய்யவும் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் உள்ள வெள்ளரிக்கண்மாயில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மீன்பிடிக்க அதிகாலை முதலே கண்மாயில் குவியத் தொடங்கினர்.
பாரம்பரிய முறைப்படி அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் வெள்ளை வீசிய பிறகு மீன் பிடிப்பவர்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடிப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு கிராம இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரும் முன்னரே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
மேலும் இந்த மீன்பிடி திருவிழாவில் பெரிய அளவிலான மீன்கள் ஏதும் சிக்காததால் மீன்பிடிக்க வந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கிராமத்தின் பாரம்பரியம் மீறப்பட்டு தன்னிச்சையாகவே பொதுமக்கள் மீன் பிடிப்பதால் பண்பாட்டு சிறப்பு மிக்க இது போன்ற மீன்பிடி திருவிழாக்கள் சிறப்புற நடைபெறுவது சந்தேகமாகிவிடும் என பெரியோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.