மதுரை - திருமங்கலம் இடையேயான இரட்டை அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் தென்மாவட்ட ரயில்கள் மதுரை ரயில் நிலையம் வழியாகச் செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேயில், திருமங்கலம் - மதுரை இடையேயான 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை அகலப்பாதை பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அந்த பணிகள் முடிந்த நிலையில், அந்த பாதையை திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இரட்டை அகலப்பாதை பணிகளை, கடந்த 13 ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், அந்த பாதையில் 123 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தார்.
இந்த பணிகளுடன் மின்சார ரயில் இயக்குவதற்கான மின்மயமாக்கல் பணிகளும் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை தலைமை முதன்மை மின் பொறியாளர் குழுவினர் சித்தார்த் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து திருமங்கலம் - மதுரை ரயில் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்ட ரயில்கள் மற்றும் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டதோடு சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இணைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஒரு மாதத்திற்குப் பின்பு இன்று முதல் ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல மதுரை ரயில் நிலையம் வழியாக இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.