தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தனியார் நிறுவனம் தொடங்கியது.
மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018-ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார்.
இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜுன் மாதம் 10-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இந்த இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும் 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும் 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்குமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக இப்பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முதலில் தொடங்க உள்ளது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியது. 12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணியானது ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.