உசிலம்பட்டி அருகே அரசு கூட்டுறவு வங்கியில் கடன் வழங்க மறுத்த ஊழியரை வங்கியின் தலைவர் மற்றும் அவரது மகன் அடித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கூட்டுறவு வேளாண் வங்கி கிளையில் எழுத்தராக பணியாற்றி வருபவர் சண்முகம். இவரை, தனது ஆதரவாளருக்கு கடன் வழங்க ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என அந்த வங்கியின் தலைவரான அதிமுக நிர்வாகி பால்ராஜ் மற்றும் அவரது மகன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி வங்கியில் வைத்தே அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிளார்க் சண்முகம் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிளார்க் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த சிந்துபட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததை அடுத்து வங்கி ஊழியரின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.