செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகும் போது, அவர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிறை வளாகத்திற்குள் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியின் மூலம் பூந்தொட்டிகள், சிமெண்ட் கிராதிகள், மருத்துவ பேண்டேஜ், இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை கைதிகள் தயாரிக்கின்றனர். இப்பொருட்கள் அனைத்தும் சிறைத்துறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை காவலர்கள் உதவியுடன் சிறைக் கைதிகள் பண்டிகைக்கு தேவையான நவதானிய இனிப்புகள், லட்டு, அல்வா, பால்கோவா, அதிரசம், மைசூர் பாகு, பாதுஷா, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்துள்ளனர். இவை கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவுகளில் பேக் செய்து FREEDOM SWEETS என்ற பெயரில் சிறை அங்காடியில் விற்பனையை இன்று முதல் சிறைத்துறை நிர்வாகம் தொடங்கி உள்ளது.
கைதிகள் தயாரிக்கும் இனிப்புகள் தரமாக, சுவையாக, சுத்தமாக இருப்பதால் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக தெரிவித்தனர். இந்த தீபாவளி சிறப்பு விற்பனையை சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.