பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் சண்டையிட்டுக் கொண்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் தலைமையில் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் விசாரணை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவ - மாணவிகள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது திடீரென 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் இரு கோஷ்டியாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவிகள் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, திடீர்நகர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், பெரியார் நிலையம் அருகில் உள்ள ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் மோதிக்கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில், சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழுவினர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
காதல் விவகாரம் காரணமாக இரு பள்ளி மாணவிகளும் தாக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், மாணவிகளின் மோதலுக்கு என்ன காரணம் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.