செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி அருகில் பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில், குப்பையோடு குப்பையாக மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்ட கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில், பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை சமூக ஆர்வலர் ரஞ்சித்குமார், தொட்டப்பநயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, கிராம நிர்வாக உதவியாளர் மெய்யக்காள் மற்றும் இளைஞர் குழுவினர் இணைந்து மீட்டனர்.
இதையடுத்து அவரது தலைமுடியை வெட்டி குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து பெரியகுளம் மனநல காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.