செய்தியாளர்: மணிகண்டபிரபு
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வரும் இவர், பாஜக தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்து வந்தார். இது தொடர்பான படங்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்துவந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல், வாட்ஸ் அப் மூலமாக, நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனார். இதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதற்கு பதிலாக புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
பாஜக பிரமுகர் ஷா, முதலில் தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.