மதுரையின் அடையாளமாக மாறி வரும் பாரம்பரிய பாணியில் கலை நயத்துடன் அமைக்கப்பட்ட செல்ஃபி பாய்ண்ட் - தேடி வந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள்.
தமிழகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர, சுற்றுலா துறை சார்பில் முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில், அந்த நகரின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'செல்பி பாயிண்ட்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. கடந்த ஓராண்டிற்கு முன், சுற்றுலாத்துறை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து தமிழ்நாடு ஹோட்டல்களையும் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக புனரமைத்தது.
அந்த வகையில், மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், அவர்களை கவர்வதற்காகவும் தற்போது மதுரை போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களில் உள்ள அதன் நுழைவுவாயில் பகுதியில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் தங்குவதற்கும், சாப்பிடவும் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆர்வமாக இந்த செல்ஃபி பாயிண்ட்டில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் அமைத்துள்ள செல்பி பாயிண்ட்டில் மதுரையின் பராம்பரிய அடையாளமுமான மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபமும், பத்து தூண், மதுரையின் பெருமையாக, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காளை அதனை அடக்கும் மாடு பிடி வீரர், புராதன பெருமை வாய்ந்த யாழி, யானை உள்ளிட்ட சிற்பங்களோடு பாரம்பரிய செல்ஃபி பாய்ண்ட் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற நகரங்களில் கூட சாதரணமாக ஐ லவ் கோவை, பழனி, சென்னை என செல்பி பாய்ண்ட்டுகள் இருக்கும் நிலையில், மதுரையில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாய்ண்ட் இளைஞர்களையும், பொதுமக்களையும் கவனம் பெறச் செய்துள்ளது.