மதுரையில் கடனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினர் நடத்தி வந்த தனியார் பள்ளி மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுரை செளராஸ்டிராபுரத்தில் வசித்து வந்த குறிஞ்சிகுமாரன், வேல்முருகன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடன் சுமையால் கடந்த 24ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டனர். இதனால் அவர்கள் நடத்தி வந்த தனியார் தொடக்கப்பள்ளி, எடுத்து நடத்த ஆளில்லாமல் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிரிழந்தவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது பள்ளியும் திறக்காததால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாழாகிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்.
இந்த பள்ளியில் பயின்று வந்த 400 குழந்தைகளையும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் அருகிலுள்ள பள்ளிகள் ஓரிரு குழந்தைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வதாகவும், மாற்றுச்சான்றிதழ், கட்டணம் போன்றவற்றை கேட்பதாகவும் பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.