மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், 9 மாடிகளை கொண்டது. இந்த கடையில் கடந்த 1 ஆம் தேதி மாலை ஒன்பதாவது தளத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கடுமையான புகை வெளியேறிய நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் - வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்த தளங்களுக்கும் புகை பரவியதால் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானர். இந்த விபத்தில் ஒன்பதாவது தளத்தில் இருந்த 4 ஊழியர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மட்டுமன்றி எட்டாவது தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எலக்ட்ரானிக் மர சாமான்கள், பிளாஸ்டிக் போன்றவைகள் இருந்ததால் அங்கும் தீ பரவி, புகை அதிகரித்து காணப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த இடத்தை மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்சித் ஜிங் காலோன், காவல் ஆணையர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏற்கெனவே உள்கட்டமைப்பு முழுமையாக முடியாத நிலையில் கடை திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு மற்றும் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக மாட்டுத்தாவணி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.