மதுரை ரயில் நிலையத்தில் 21 மணி நேர கார் பார்க்கிங் கட்டணமாக ரூ. 500 வசூல் செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள மதுரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் 21 மணி நேரத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல் 3 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 75 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 21 மணி நேரம் 39 நிமிடம் காரை நிறுத்தி வைத்திருந்த ஒரு ரயில் பயணிக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டண சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 12 மணி நேரத்திற்கு வாகனங்களை பொறுத்து 10 ரூபாய் முதல் 30 ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, தேவையின்றி வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த இது போன்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.