மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், இன்று மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அக்கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
அப்போது மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, 'மதுரைக்கு உங்களை யார் வர சொன்னது அனுமதி இல்லாமல் மதுரைக்கு வரக்கூடாது' என்று தலைமை கழகம் உத்தரவை மீறி உள்ளதாக கூறி ரமேஷ் குமாரையும் அவரது ஆதரவாளர்களையும் தனியார் விடுதியில் இருந்து விரட்ட முற்பட்டனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரை எஸ்எஸ்.காலனி போலீசார் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரமேஷ் குமார் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களை புறப்படுமாறு காவல் துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.