செய்தியாளர்: பிரசன்னா
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள பழைய விஜயலட்சுமி திரையரங்கம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுள்ளது.
இந்நிலையில், இங்கு பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். இதில், கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து, தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக மதுரை கே.கே.நகர் பகுதியில், தமிமுன் அன்சாரி என்பவரது தனது வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, அவர் வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதை அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவில், வந்த மர்ம நபர்கள் அந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதில், 2 வாகனங்களும் எரிந்து நாசமானது. இந்நிலையில், தற்போது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.