குமரி மாவட்டத்தில் திருமண விருந்திற்குச் சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிழக்கே விளை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சுதா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், எனது சகோதரர் ஜெகதீஸ் என்பவருக்கும் பாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த ஜூன் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சரண்யாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தே, சரண்யாவை திருமணம் செய்ய ஜெகதீஸ் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு ஜெகதீஸ், சரண்யா தம்பதியினர் சரண்யாவின் உறவினர்கள் வீட்டில் விருந்துக்குச் சென்றிருந்தனர். அப்போது சரண்யாவின் சித்தப்பா வீட்டில் உணவருந்தி விட்டு வந்தனர். அதன் பிறகு ஜெகதீஸ் சுயநினைவின்றி இருப்பதாக, ஜெகதீசனின் உறவினர்களுக்கு சரண்யா போன் செய்திருந்தார்.
இதையடுத்து ஜெகதீஸை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார் என்றும் சரண்யா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஸ் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு சரண்யா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜெகதீஸ் உடல், தக்கலை அரசு மருத்துமனை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் அதிகம் இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே ஜெகதீஸ் மரணத்தில் மர்மம் உள்ளது. ஜெகதீஸ் மர்ம மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜீ.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமண விருந்திற்குச் சென்ற புது மாப்பிள்ளை ஜெகதீஷ் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.