செய்தியாளர்: ரமேஷ்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டு குறித்து தனது X வலைதள பக்கத்தில கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன.
அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது என்று டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ஜல்லிக்கட்டு ஒரு சானாதனத் திருநாள் என்ற கட்டுரையை பகிர்ந்திருந்தார். இதற்கு மதுரை எம்பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புதிய தலைமுறைக்கு பிரத்யே பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்...
" ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிவிட்டுள்ள கருத்து அதிர்ச்சியாக உள்ளது. புராண இதிகாசங்கள் பின்னணியில் ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு என சொல்லலாம். அது தவறில்லை. ஆனால், இதற்கு மாறாக தீய நோக்கோடு அரசியல் செய்கிறார்கள், பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள் என குற்றம்சாட்டுவது முற்றிலும் திசை திருப்பும் வேலை. தொடர்ந்து அவர் இதை செய்கிறார்.
எந்த டி.எஸ்.கிருஷ்ணா பதிவை மேற்கோள்காட்டி சொன்னாரோ அதே டி.எஸ்.கிருஷ்ணாவை வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கண்காட்சியில் கோயில் சொத்துகள் கொள்ளை போகிறது என அப்போது நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழர்கள் அடையாளம் முன்னோர் வழிபாடு. 20 ஆயிரம் பொருட்கள் கீழடியில் கிடைக்க பெற்றுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் 35 முறை மதுரை வந்துள்ளார். ஆனால் அவர், ஒருமுறை கூட கீழடிக்கு வரவில்லை. நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட யாரும் கீழடிக்கு வரவில்லை. அங்கு பெருமதம் கொண்ட அடையாளங்கள் ஏதுமில்லை. அதனால் அவர்களுக்கு கசக்கின்றது. தமிழும் திமிலும் நமது அடையாளம்" எனத் தெரிவித்தார்.