சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று பூ பல்லக்கில் எழுந்தருளி மீனாட்சியம்மன் அருள்பாலிக்க, பிரியாவிடையுடன், சொக்கநாதர் தங்க அம்பாரியுடன் கூடிய கஜ வாகனத்தில் அமர்ந்து மாசி வீதியில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், இரு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பிரியாவிடையை, சொக்கநாதர் கரம்பிடிக்கும் வைபவத்தை கண்குளிர தரிசித்தனர்.
பிரியாவிடைக்கு மங்கல நாண் சூட்டிய அதே நேரத்தில் அங்கு கூடியிருந்த சுமங்கலி பெண்களும் புதிதாக மங்கல நாணை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து நேற்றிரவு தாமரை, ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி என பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் மீனாட்சியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண தெய்வானையுடன் வந்திருந்த திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனத்திலும், எம்பெருமானுக்கு தாரை வார்த்து தர வந்திருந்த பவழக்கனிவாய் பெருமாள் கருட வாகனத்திலும் வலம் வந்தனர். தங்க அம்பாரியுடன் கூடிய வெள்ளை கஜ வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தம்பதி சமேதமாய் அருள்பாலித்தனர்.