மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா
மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா
Published on

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெற உள்ளது என்பது நம்பிக்கை. பட்டத்து அரசியாக மகுடம் சூடிய மீனாட்சிக்கு வரும் 24 ஆம் தேதி சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.

இதனை குறிக்கும் வகையில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளன்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளாக நாளை 23 ஆம் தேதி திக் விஜயம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர். முன்பெல்லாம் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் அம்பாளின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார் என்பது நம்பிக்கை.

திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு , அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி , கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும்.

பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டம் சூடிய மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் , வெள்ளி சிம்மாசனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கொரோனா காலம் என்பதால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. உள் புறப்பாடு நடைபெறும் போது பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது நாளை திக் விஜயமும் நாளை மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com