கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம் கடந்த 24-ம் தேதி சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியின்போது பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளினர்.
10 நாட்கள் நடைபெரும் இந்த உற்சவத்தில் இன்று திருக்கார்த்திகை தீபவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகமே அழகுற ஜொலித்துக்கொண்டிருக்கிறது. சுவாமி சன்னதி முன்புள்ள சித்திரை வீதியிலும், அம்மன் சன்னதியின் சித்திரை வீதியிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளையும், சுவாமியையும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.