சவுதியில் உயிரிழந்த பணியாளரின் உடலை அனுமதியின்றி புதைத்துள்ளதால் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகேயுள்ள தொப்புலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி் என்பவர் தனது மனைவி வேடச்சி மற்றும் இரு மகனுடன் அதே கிராமத்தில் வசித்து வந்துள்ளார். ஆண்டிச்சாமி கட்டடங்களில் கம்பி கட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி பகுதியைச் சேர்ந்த முகவர் மூலமாக சவுதி அரேபியாவிற்கு பணிக்கு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்பி கட்டும் கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். கடந்த மே 19ஆம் தேதியன்று தனது அறையில் இருந்த ஆண்டிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஆண்டிச்சாமியின் குடும்பத்தினருக்கு அவருடன் தங்கி இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஆண்டிச்சாமியின் குடும்பத்தினர் உயிரிழந்த ஆண்டிச்சாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என அடுத்த நாளே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இமெயில் மூலமாக உறவினரான சின்ன மூக்கையன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்திய தூதரகம் மூலமாக அனுப்பபட்ட மெயிலுக்கு பதில் அளித்த நிறுவனமானது உடலை இந்தியாவிற்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும், கார்கோவில் அனுப்புவதற்கு தயார் செய்தால் சொந்த ஊருக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் பதில் அளித்துள்ளனர்.
ஆனால் இதன்பிறகு 30 நாட்களாகியும் உடலை சொந்த ஊருக்கு அனுப்பாத நிலையில் நேற்றைய தினம் இமெயில் மூலமாக இந்திய தூதரகத்திற்கும், நிறுவனத்திற்கும் உடலை பெறுவது குறித்து கேட்டதற்கு ஆண்டிச்சாமியின் உடலை அவர் பணிபுரிந்த நிறுவனமானது சவுதி அரேபியா நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் ஆண்டிச்சாமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அதற்கு பதில் அளித்துள்ள இந்திய தூதரகம் தங்களது அனுமதி இல்லாமல் உடலை புதைத்துள்ளனர். எனவே உடலை விரைவாக எடுத்து இந்தியாவிற்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மெயில் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஆண்டிச்சாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனது கணவரின் உடலை கொண்டுவர அரசு உதவவேண்டும் எனவும், இரு பிள்ளைகளுடன் தவித்துவரும் தங்களது குடும்பத்திற்கு நிறுவனமும், அரசும் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.