தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சிறைவாசிகளின் நலன், சிறைக்காவலர் நலன் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை, பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய நூலகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிறை நூலகத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நூலகத் திட்டத்தின் அடுத்தக் கட்டமாக கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மத்திய சிறையில் கேபிள் வழியாக ஆடியோ, வீடியோவுடன் நற்கருத்துக்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் நூலகத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் பல்வேறு புத்தகங்களின் கதைகளை முழுமையாக விளக்கும் விதத்தில் ஒளி, ஒலி காட்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறைவாசிகள் அவரவர் அறைகளில் இருந்தபடியே, வீடியோ, ஆடியோ வாயிலாக ஒரு புத்தகம் பற்றிய முழு விளக்கத்தை கதை வடிவிலும், வாசிப்பு நிலையிலும் ஒரே நேரத்தில் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் முழு புத்தகத்தை படித்து உள்வாங்கிய திருப்தி கிடைக்கும் என, சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறையில் உள்ள 54 பிரிவு கட்டிடங்களில் உள்ள 52 தொலைக்காட்சிகள் மூலம் புத்தகம் குறித்த ஒலி, ஒளி காட்சிகள் ஒளிபரப்ப செய்யப்பட்டுள்ளது. பெண்கள் சிறையில் 4 டிவிக்கள் மூலம் பார்க்கவும், கேட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரத்தை பொறுத்து தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 முதல் 1.30 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கைதிகளுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, ஆன்மீகம், இலக்கியம், வரலாறு, நீதி போதனை, நன்னெ்றி நூல்கள், கதைகள், நாவல் போன்ற புத்தகங்களும், காலை நேரத்தில் இலக்கிய வாதிகள், ஆன்மீகவாதிகள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களின் உரைகளும் வீடியோவுடன் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக தற்போது தலைமை செயலாளராக உள்ள இறையன்பு, தென்கச்சி கோ.சுவாமிநாதன், பொன்னியின் செல்வம், ஆகியோரின் பேச்சுகளும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மதுரை மத்திய சிறையில் சிறை நூலகத்திட்டத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 15,000 புத்தகங்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.