மதுரை பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் சண்டையிட்டுக் கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை அரசுப் பள்ளி மாணவிகள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
சண்டையிட்ட மாணவிகள் யார் என்பதை அடையாளம் கண்டு அதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சண்டையிட்டுக் கொண்ட மாணவிகளிடம் நாளை நேரில் விசாரணை நடத்தவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.