“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்” 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிபதிகள் நம்பிக்கை

“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்” 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிபதிகள் நம்பிக்கை
“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்” 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிபதிகள் நம்பிக்கை
Published on

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக்கோரி, மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை எனினும் அவர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் எனவும் கர்நாடகாவில் மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை உறுதி செய்து தகவல் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களாகியும் ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த ஆண்டு 400 முதல் 500 மாணவர்கள் வரை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பினும் உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனில் 8 மாணவர்கள் மட்டுமே மருத்து இடங்களை பெற இயலும் என தெரியவருகிறது. அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள், பதிலளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் எனும் நம்பிக்கை காரணமாகவே, ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க தேவையில்லை என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கையை விரைவாகத் தொடங்குவது அவசியம். விதி 361ன் படி ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் சமூக பொருளாதாரரீதியாக பின் தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும். இந்த ஆண்டாவது 300 முதல் 400 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். இதுகுறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நீதிமன்றம் நம்புகிறது” எனத் தெரிவித்து வழக்கை திங்கட்கிழமை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com