ஸ்டெர்லைட் நிறுவன தலைவருக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

ஸ்டெர்லைட் நிறுவன தலைவருக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
ஸ்டெர்லைட் நிறுவன தலைவருக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸின் சிப்காட் 2 பூங்கா முறையான சான்றிதழ்கள் இன்றி தொடங்கபட்டதாக கூறி அதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர், திட்ட அலுவலர் மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை சங்கர்நகரைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் மேலவிட்டான் கிராமங்களில் சிப்காட் 1 தொழில்நுட்ப பூங்கா  இயங்கி வருகிறது. இந்நிலையில் சிப்காட் பூங்கா 2 அமைக்கப்படுகையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்  தடையில்லா சான்றைப் பெறுவது கட்டாயம். அதோடு, மாசு கட்டுப்பாட்டு மற்றும் முன்னெச்சரிக்கை சட்டத்தின் கீழும் சான்றிதழ்களைப் பெற வேண்டும். இந்த சான்றிதழ்களை தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான  பணிகளை தொடங்குவதற்கு முன்பாகவே பெறுவது அவசியம். இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு நகர திட்டமைப்பு சட்டப்படி "லே அவுட்"டைப் பெற வேண்டும்

இந்நிலையில் சிப்காட் 1 அருகில் கூடுதல் யூனிட்டுகளை அமைக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் அரசை அணுகிய நிலையில் முறையான சான்றிதழ்கள், "லே அவுட்" எதுவுமின்றி அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போது, சுற்றுச்சூழல் தடையில்லா சான்று, யூனிட்டை அமைப்பதற்கான சான்று, அதனை இயக்குவதற்கான சான்று என எதுவும் இரண்டாம் யூனிட்டிற்கு பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸின் காப்பர் தூய்மை யூனிட் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  இந்த நிலையில் முறையான அனுமதியின்றி தொடங்கப்பட்டு வரும் சிப்காட் 2ஆம் யூனிட் செயல்பட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இது குறித்து சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர், திட்ட அலுவலர் மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் தலைவருக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com