"கூலிப்" போன்ற போதைப்பொருள் பயன்பாட்டால், இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என மதுரை அமர்வு நீதிபதி பரதசக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
உடன் "கூலிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரும் வழக்குகள் மதுரை அமர்வு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, தமிழகத்தில் "கூலிப்" எனும் போதை பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமின் கோரி பல வழக்குகள் வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் "கூலிப்" உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க இது போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததே காரணம்.
இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்?. "கூலிப்" போன்ற போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு குழந்தை உளவியல் அறிந்து கவுன்சிலிங் வழங்குவது, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது. தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் "கூலிப்" எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் இருப்பதாகவே தெரிகிறது.
ஆகவே "கூலிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்ட நீதிபதி செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.