ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சேகரன் தொடர்ந்த பொதுநல வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில், கோரிக்கைகளை நிறைவேற்ற வேலை நிறுத்தத்தை ஒரு ஆயுதமாகக் கையாளக்கூடாது என்றும், வேலைநிறுத்தம் மட்டுமே உடனடித் தீர்வாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசு நிர்வாகம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றைப் பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவது அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறிய நீதிபதிகள், கோரிக்கைகளை வெளிப்படுத்த வேறு வழிகளைக் கையாள வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, ஊடகங்கள் வாயிலாக போராட்டக்காரர்களுக்கு தலைமைச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள், போராட்டத்தை முன்னெடுக்கும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.