பொது இடங்களிலுள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

பொது இடங்களிலுள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பொது இடங்களிலுள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Published on

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்கதேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெற்றும், பெறாமலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர். பல இடங்களில் இந்த சிலைகள் காரணமாக சமூக ஒற்றுமையும் பாதிக்கப்படுகிறது. சிலை வைக்கப்பட்டவர்களின் பிறந்தநாள், நினைவுநாளன்று அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் கூறி ஏராளமான கூட்டம் கூடுவதால் போக்குவரத்து பிரச்சினைகள் எழுகிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமூகப் பிரச்சினைகள் எழக்கூடாது என்பதால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றவும், அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடவும், புதிதாக சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வு, “பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்கு 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளது. தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com