4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்கிவைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்கிவைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
4 மாணவர்களுக்கு மருத்துவ சீட் ஒதுக்கிவைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, வாய்ப்பை தவற விட்ட 4 மாணவர்களுக்கு தலா ஒரு MBBS/ BDS சீட்டை ஒதுக்கி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரமக்குடி பிடாரிசேரியைச் சேர்ந்த கார்த்திகாஜோதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. தாயார் விவசாய கூலி தொழிலாளி. எனக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் சீட் கிடைத்தது. பணம் கட்ட முடியாததால் என்னால் சேர முடியவில்லை. இந்நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதனால் எனக்கு பிடிஎஸ் சீட் ஒதுக்கவும், அதுவரை எனக்காக ஒரு பிடிஎஸ் சீட்டை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தகுதியான மாணவர்களின் மருத்துவக்கனவு வீணாகக்கூடாது என்ற நோக்கத்திற்காக தமிழக முதல்வர் எடுத்துள்ள சிறப்பான முடிவு, மனுதாரர் பிடிஎஸ் வாய்ப்பை மறுத்த மறுநாள் வந்துள்ளது.

எனவே, முதல்வரின் அறிவிப்பின் பலனை மனுதாரரை போன்றவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ்/ பிடிஎஸ் சீட் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் இந்த முடிவால் தமிழகத்தில் பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தகுதியான மருத்துவர்கள் அதிகளவில் வருவர்.

மருத்துவ சீட்டுக்காக அதிக பணம் செலவு செய்பவர்கள் உயர் கல்விக்கு பிறகு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். சேவையாற்ற முன்வரமாட்டார்கள். இந்த வகையில் தமிழக முதல்வரின் முடிவு பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் மனுதாரருக்காக ஒரு எம்பிபிஎஸ்/ பிடிஎஸ் சீட் காலியாக வைத்திருக்க வேண்டும். விசாரணை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது"என உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர் டி.அருண், மாணவிகள் சவுந்தர்யா, கவுல்சயா ஆகியோருக்காகவும் தலா ஒரு எம்பிபிஎஸ்/ பிடிஎஸ் சீட்டை காலியாக வைத்திருக்க உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com