ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூரைச் சேர்ந்த பெண்ணிற்கு 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் தேதி ஹெச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், மதுரையை சேர்ந்த அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தங்களது தீர்ப்பில், “பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்ச ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். 10 லட்ச ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதமுள்ள 15 லட்ச ரூபாயை மைனரான இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் மேஜரான பின்பே இந்தத் தொகையை எடுக்க இயலும் வகையில் டெபாசிட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறைகளைக் கொண்ட சுற்றுச் சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும். அவருக்கு குரூப் 4 தகுதிக்கு குறையாமல் அரசுப்பணி வழங்க வேண்டும்” உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், “ஆற்றுப்படுத்துநர், ஆய்வக தொழில்நுட்பனர், ரத்த வங்கி தொழில்நுட்பனர், செவிலியர்கள் பணியிடங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகள், ART மையங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். அவற்றின் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா? அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கின்றனரா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
ரத்தம் வழங்குதல், பெறுதலை பாதுகாப்பானதாக மேற்கொள்ள வல்லுநர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குதல் தொடர்பாக உரிய பயிற்சி அளித்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர்.