குடிமராத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை தேவை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

குடிமராத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை தேவை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குடிமராத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை தேவை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 2016-ம் ஆண்டு குடிமராமத்து திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வார்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில், 21 ஆயிரத்து 609 குட்டைகளும், 48 ஆயிரத்து 758 குளங்கள் மற்றும் ஊருணிகளும் உள்ளன. குடிமராமத்து பணியின் கீழ் நீர்நிலைகளை பராமரிப்பதற்காக 2016 - 17 ஆம் ஆண்டில் 100 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் 328 . 95 கோடியும் 2019- 20 ஆண்டுகளில் 499.65 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தமாக 928. 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் , கடந்த 2019ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்திருந்தார்.

தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம் ஆகும். ஆகவே தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை, அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, "குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல. மேலும் ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும். எனவே குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளம் தொடங்கி அதில் குடிமராமத்து பணி நடைபெறக்கூடிய இடம், பணியின் விவரம், கால அளவு அதற்கான செலவழிக்கக் கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் போன்ற முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பணி முடிவடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com